தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தளர்வுகள அளிக்கப்பட்டு வந்தாலும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மட்டும் தற்போது வரை நடைபெற்றுவந்த வண்ணம் உள்ளது. மேலும், செப்டம்பர் 15க்கு பின் பள்ளிகள் இணைய வகுப்புகளுக்காக 50 சதவீத ஆசிரியர்களை அனுமதிக்கலாம் எனவும், மாணவர்களுக்கு விருப்பமெனில் நேரடியாக ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு கலந்துரையாடி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அக்டோபர் மாத ஆரம்பத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபடுவதாகவும், 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும், நோய்த்தொற்று முழுமையாக நீங்கிய பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் எனவும், அக்டோபரில் பள்ளிகள் திறக்கப்படுவதாக வந்த செய்தி தவறு எனவும், அது குறித்து எந்த தகவலும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். எனவே, பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதுபோன்ற பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.