பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் (2020) நடைபெற்று, அவற்றிற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. அதன்பின், மார்ச் மாதம் (2020) நடைபெற்ற பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அதற்கான தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது செப்டம்பர் மாதம் நடைபெறும் அந்த துணைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இணையதளத்தில் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்கள் https://apply1.tndge.org/dge-hallticket-active என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு தங்களின் நிரந்தர பதிவு எண் அல்லது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் குறித்த விவரங்களை உள்ளிடுவதன் மூலம் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களின் விண்ணப்ப எண்ணை தவறவிட்ட தேர்வர்கள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2020 பொதுத் தேர்வு தனித் தேர்வர்கள் விண்ணப்பித்து அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் வருகை புரியாது அல்லது செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 15க்கு குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் ஆகியோர் நடைபெற உள்ள துணை தேர்வின்போது, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் எனவும், அறிவியல் பாடத்தில் கருத்தியல் மற்றும் செய்முறை இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெறாத பகுதிக்கு மட்டும் தேர்வர்கள் தேர்வு எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post