தமிழகத்தில் தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தொடங்கி நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும், செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை இருக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், முழு கட்டணத்தையும் மாணவர் சேர்க்கை போதே செலுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் நிர்பந்தபடுத்தபடுவதாகவும் கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சரிடம் கேட்டபோது, புகார் அளிக்கப்பட்டால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அதிக கல்விக் கட்டணம் வசூலித்தல் மற்றும் முழு கட்டணத்தையும் உடனே செலுத்தக் கோரி பெற்றோர்களை நிர்பந்தபடுத்துதல் அல்லது நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்துதல் தொடர்பாக புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 18 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மெட்ரிகுலேசன் இயக்குனரகம் உடனடியாக விளக்கம் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பெற்றோர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக கட்டணம் வசூலித்தல், முழு கல்விக் கட்டணத்தையும் உடனடியாக செலுத்த கூறி பெற்றோருக்கு நெருக்கடி அளித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.