தமிழகம் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் வண்ணம் புதிய கல்விக் கொள்கை 2020 மத்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்டது. மேலும், இதுகுறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் தொகுப்புகள் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், இந்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்டன. தற்போது மத்திய கல்வி அமைச்சகம் இந்த புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து தங்களுக்கு இருக்கும் கருத்துக்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி முதல்வர்கள் ஆகியோர் சுதந்திரமாக தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. இன்று (24/08/2020) முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் அல்லது தலைமையாசிரியர்கள் இந்த புதிய கல்விக் கொள்கை குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://innovateindia.mygov.in/NEP2020/ என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சக செயலர் அனிதா அகர்வால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும், ஆசிரியர்களின் இக்கருத்துக்களை கவனத்தில் கொண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.