ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை தெரிவித்தார். அதில், தமிழகத்தின் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்வரின் முக்கிய கொள்கையாக உள்ளது. மேலும், அதுவே அரசின் முக்கிய தீர்மானமாகும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என தெரிவித்தார். மாணவர் சேர்க்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் இதுவரை அரசு பள்ளிகளில் வழக்கத்துக்கு மாறாக 2.35 லட்சம் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என தெரிவித்தார். மேலும், இது படிப்படியாக அதிகரித்து இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2.75 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு இன்னும் பதினைந்து நாட்களுக்குப்பின் தொடங்கும் என தெரிவித்தார். பள்ளிகள் திறப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கொரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. எனவே, இந்நிலை முழுவதுமாக சீராகும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும். அதுவரை பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்தார்.