செப்டம்பரில் நடைபெறவிருக்கும் நீட் (NEET) மற்றும் ஜேஇஇ (JEE) தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மேலும், திட்டமிட்டபடி செப்டம்பர் 1 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஜேஇஇ மெயின்நுழைவுத் தேர்வு (JEE Main), செப்டம்பர் 27 ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வும் (JEE Advanced) மற்றும் செப்டம்பர் 13ல் நீட் (NEET) தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது.
தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விவரம் :
- தேர்வு எழுத வரும் தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.
- வீட்டில் இருந்து வரும்போது தண்ணீர் பாட்டில் மற்றும் சனிடைசர்கொண்டு வருதல் வேண்டும்.
- தேர்வர்கள் தேர்வு மையத்தை அடைந்தவுடன் தாங்கள் அணிந்து வந்த முக கவசத்தை நீக்கிவிட்டு தேர்வு மையத்தில் தரப்படும் புதிய முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்.
- தேர்வு எழுதும் போது, முகக் கவசங்கள், கையுறைகளை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை.
- தேர்வு அறைக்குள் முகக்கவசம், கையுறை மற்றும் அனுமதிச்சீட்டு தவிர பிறவற்றை எடுத்து வர அனுமதி இல்லை.
- தேர்வு மையத்தில் கூட்ட நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு, தேர்வர்கள் வருகைக்கான நேரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நேரத்தில் தேர்வர்கள் வருகை பெறுதல் வேண்டும்.
- தேர்வு மையத்திற்குள் வருவதற்கான நேரம் குறித்த தகவல்கள், அனுமதிச் சீட்டு மற்றும் கைபேசி குறுஞ்செய்தி வாயிலாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும்.
- தேர்வர்கள் தங்களுக்குள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- மேலும், தேர்வர்களின் உடல் வெப்பநிலை 99.4 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் தனி தேர்வு அறையில் தேர்வு எழுத அழைத்துச் செல்லப்படுவர். அங்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பின் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போதும் உடல் வெப்பநிலை 99.4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருந்தால், அவர்கள் தனி தேர்வறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
- உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் தேர்வு மையத்தின் பதிவு அறையில் மேற்கொள்ளப்படும்.
- இப்பணிகளுக்கு தேர்வர்கள் தங்கள் அனுமதி சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட தேவையான முக்கிய ஆவணங்களை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
- இந்நடைமுறைகளுக்குப் பின் தேர்வர்கள் தேர்வு எழுத வேண்டிய தேர்வு அறை எண் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும்.
- தேர்வு அறைக்குள் நுழையும் முன் தேர்வர்கள், தங்கள் கைகளை சோப் மற்றும் சனிடைசர் பயன்படுத்தி நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- தேர்வர்களின் பயன்பாட்டிற்காக தேர்வு மைய வளாகத்தில் ஆங்காங்கே சோப்பு மற்றும் சனிடைசர் வைக்கப்பட்டிருக்கும்.
- தேர்வறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்களின் 50% பேர் தேர்வு அறைக்குள் இருப்பார்கள். மீதமுள்ளோர், அனைத்து மாணவர்களும் தேர்வு அறைக்குள் நுழையும் வரை தேர்வு மைய வளாகம், பதிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், தேர்வு அறை வெளிப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
- தேர்வு முடிந்ததும், தேர்வர்கள் ஒவ்வொருவராக தேர்வு அறையை விட்டு வெளியில் அனுப்பப்படுவார்கள்.
- தேர்வு அறையை விட்டு வெளியேறியதும், தேர்வர்கள் தங்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அங்கு வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில் போடவேண்டும். எக்காரணம் கொண்டும் அவற்றை தேர்வு மைய வளாகம் மற்றும் பொது இடங்களில் வீசுதல் கூடாது.
- தேர்வர்கள் தேர்வு மையம் மற்றும் தேர்வு அறைக்குள் நுழையும் போதும் மற்றும் வெளியேறும் போதும் போதிய சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
- இதனை கண்காணிக்க தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
என்பன உள்ளிட்ட நடைமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.