"அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா நோய்த்தொற்று சூழலில், பள்ளி கல்லூரிகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில அரசு பள்ளிகளில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் செலுத்த சொல்வதாகவும், அவர்களிடம் அதிக பணத்தொகை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், இதுவரை அரசு பள்ளிகளில் கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் எனவும், ஏற்கனவே அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன எனவும், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் உட்பட யாரும் எக்காரணத்தை கொண்டும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதை உறுதிபட தெரிவித்தார். மேலும், அவ்வாறு தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Previous Post Next Post